மாடு மேய்க்கும் போராட்டம்
தமிழ்நாட்டின் மொத்த காடுகளின் பரப்பளவு 26,450.22 சதுர கிலோமீட்டர் ஆகும். இது மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 20.31% ஆகும். இவற்றை பாதுகாக்கும் பணியில் உள்ள சீருடைப்பணியாளர்களின் எண்ணிக்கை 6500 க்கும் குறைவு என்பதை அனைவரும் அறியவேண்டும்.
ஒரு இடத்தை காப்புக்காடாக மாற்றுவதும் சரணாலயமாக அறிவிப்பதும் அரசாங்கம். அந்தப் பகுதிகளை பாதுகாக்கும் ஒரு துறையை அதாவது வனத்துறையை ஏற்படுத்தியது அரசாங்கம் ஆகும். அரசாங்கம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகளை கொண்ட ஒரு அமைப்பாகும். வனத்துறையினரால் பாதுகாக்கப்படும் காப்புக்காட்டிற்குள் கால்நடைகளை ஓட்டிச்சென்று போராட்டத்தை நடத்தியது ஏற்புடையதுதானா என்ற எண்ணம் ஏற்படுகிறது. போராட்டம் அரசாங்கத்திற்கு எதிராக அதாவது சட்டத்தை எதிர்த்து என்று வைத்துக்கொண்டாலும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வனத்துறையை எதிர்த்து என்றாலும் வனப்பகுதியில் சென்று நடத்தலாமா? என்பதுதான் பலரின் கேள்வியாகும். குறிப்பாக இயற்கையைப்பற்றி அதிகம் பேசும் தலைவராக அறியப்பட்டவர்களில் ஒருவரான திரு.சீமான் அவர்கள் வனப்பகுதிக்கே சென்று போராட்டம் நடத்தியதை ஏற்கமுடியவில்லை என்று பலரும் கூறுகின்றனர்.
வனத்துறையினர் வனப்பாதுகாப்பு பணிகள் தவிர்த்து பல்வேறு திட்டம் சார்ந்த பணிகள், அலுவலகப் பணிகள், வன உயிரின மீட்பு பணி, மனித வன உயிரின மோதல், நீதிமன்ற நடவடிக்கை என இரவு பகல் மழை வெயில் என எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இல்லாத தொலைதொடர்பு வசதி இல்லாத பல்வேறு இடங்களில் வார விடுமுறை ஏதும் இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் அவர்களின் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் பாதிக்கப்படுவது வனப் பணியாளர்கள் தான் என்பதை போராட்டம் நடத்தியவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இவர் வனப்பகுதியில் சென்று போராட்டம் நடத்திவிட்டதால் அடுத்த நாள் பொதுமக்கள் அங்கு மாடு மேய்க்க அனுமதிக்கப்படுவார்களா? அல்லது சட்டம் தான் அனுமதிக்குமா? சட்டத்தை மாற்ற அல்லது திருத்த அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் அல்லது அது தொடர்பாக அலுவலர்களை சந்தித்து அதற்கான தீர்வு காண ஆலோசிக்கவேண்டும். அரசு அதிகாரிகள் பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் என அனைவருமே சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். சட்டத்தை மீறி, தடையை மீறி போராட்டம் நடத்துவதால் அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியாதா? அந்தப் போராட்டம் நடத்திய போது அங்கு பணியில் உள்ள வனப்பணியாளர்களின் நிலைமை யார் அறிவர்? போராட்டத்திற்கு பின் அடுத்த நாள் முதல் பொதுமக்களை எப்படி அணுகுவது, அப்பகுதியில் சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது போன்ற பல்வேறு சிக்கல்கள் வனத்துறை பணியாளர்களுக்கு உள்ளது. இப்படி வனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு வனப்பகுதிக்கு சென்று போராட்டம் நடத்தினால்தான் தீர்வு கிடைக்குமா?
தற்போது தான் வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. புதிதாக சேர்ந்த பலரும் இரவு பகல் மழை வெயில் வார விடுமுறை இன்றி உள்ள நிலையை உணர்ந்து பணியை துவங்குகின்றனர். அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உதவவேண்டும் என்று வன சீருடைப்பணியாளர்கள் கருதுகின்றனர். வனத்துறைக்கு உதவவேண்டும். வனச்சட்டங்களை மதிக்கவேண்டும். வனத்தையும் வன உயிரினங்களையும் காக்கவேண்டும்.
No comments:
Post a Comment