ஒரு மரத்திற்கு 10 செடிகள்

 மரங்களின் முக்கியத்துவம் பற்றி தற்போது அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டு மரக்கன்றுகள் நடவு செய்தும், இருக்கும் மரங்களை பாதுகாத்தும் வருகின்றோம். இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயற்கையாக உள்ள மரங்கள் அவ்வப்போது வெட்டப்படுகின்றது. அதாவது சாலை அமைத்தல். இருப்புப்பாதை அமைத்தல், தொழிற்சாலைகள் அமைத்தல் என இதன் பட்டியல் நீளும். இவ்வாறு மரங்கள் வெட்டுவதை தடுக்கமுடியாது. ஆனால் அதற்கான நெறிமுறைகளை உருவாக்கமுடியும். 


இவ்வாறு அத்தியாவசிய தேவைகளுக்காக மரங்கள் வெட்டப்படவேண்டிய சூழலில் ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை 

G.O M.S. No 704 (Public Miscellaneous Department) Date 03.10.2010 ஆகும்.



முள்ளம்பன்றி (Porcupine)

 முள்ளம்பன்றி (Indian Porcupine)

தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள் (Porcupine) ஊசி முனையுடைய நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட கொறிக்கும் வகை உயிரினமாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமான முள்ளம்பன்றி இனங்கள் வாழ்கின்றன. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்படும் இனங்கள் ஹிஸ்ரிசைடியே (Hystricidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை.

இந்தியா மற்றும் இலங்கையில் பரவலாகக் காணப்படும் முள்ளம்பன்றி இந்தியன் போர்குபைன் (Indian Porcupine) எனப் பொதுவாக அழைக்கப்படும். ஹிஸ்டிரிக்ஸ் இன்டிகா (Hysterix indica) என்ற இனத்தைச் சேர்ந்தவை. இவை பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், வங்காளதேசம், இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன.


திருத்தியமைக்கப்பட்ட 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டம் அட்டவணை 1 (Schedule I) வரிசை எண் 120 இல் காணப்படுகிறது (பாலூட்டிகள் என்னும் பகுதி) எனவே இந்த உயிரினத்தை வேட்டையாடுவது மற்றும் அதற்கான முயற்சியில் ஈடுபடுவது ஆகியவை வனச்சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். 

பசுமை தமிழ்நாடு இயக்கம்

இன்று 17.06.23 ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மாண்புமிகு ஆர்.காந்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களால் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து துவக்கி வைக்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வன அலுவலர், காவல்துறை அலுவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள், வனச்சரக அலுவலர்கள், வனவர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர். 


இத்திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் பசுமைப்போர்வையை அதிகரிக்கமுடியும். தேசிய வனக்கொள்கையின்படி ஒரு நாட்டின் மொத்த பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதி இருக்கவேண்டும். ஆனால் தமிழகத்தில் தற்போது வனப்பகுதி மற்றும் தனியார் நிலங்களில் உள்ள மரங்கள் ஆகியவற்றின் பசுமைப்பரப்பு 23.69 சதவீத அளவிற்கு மட்டுமே உள்ளது. 

எனவே தற்போது பசுமைப்பரப்பின் அளவை அதிகரிக்கும் நோக்குடன் அரசு பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற இயக்கத்தை உருவாக்கி அதன் மூலம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாய நிலங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இத்திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுவதுடன் நடவு செய்யப்படும் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுவது கண்காணிக்கப்பட உள்ளது. மரக்கன்றுகள் தனியார் நிலங்களில் முழுவதுமாகவோ அல்லது வரப்பு ஓரங்களிலோ நடவு செய்யலாம். இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த பயன்கிடைக்கும். மரப்பயிரும் பணப்பயிர்தான் என்பதை விவசாயிகள் உணர்ந்து மரக்கன்றுகளை நடவு செய்ய தற்போது ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. 

மரக்கன்றுகளை நடவு செய்தபின்னர் ஊடுபயிராக வேர்க்கடலை, எள், உளுந்து போன்றவற்றை பயிரிட்டு பயன்பெறமுடியும். இவ்வாறு ஊடுபயிரிடுவதால் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளின் வளர்ச்சி மிகவும் நன்றாக இருக்கும்.

                          


Vellore Circle

பணிநிறைவு பாராட்டு விழா

திரு.K.K.சம்பத்
வனவர்
அமிர்தி வனச்சரகம்
வேலூர் வனக்கோட்டம்
நாள் 31.05.2023

இன்று 31.05.2023 வேலூர் வனக்கோட்டம், அமிர்தி வனச்சரகத்தில் பணிபுரிந்த திரு.K.K.சம்பத், வனவர் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெற்றார்.

வனக்காப்பாளர் திரு.S.ஸ்ரீவெங்கடேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். இவ்விழாவிற்கு தலைமையேற்று நடத்திய வனச்சரக அலுவலர் திரு,C,முருகன் அமிர்தி வனச்சரகம் அவர்கள் பணி ஓய்வு பெறுவதற்கான ஆணை வழங்கி சிறப்புரையாற்றினார். 


இவர் கடந்த 23 ஆண்டுகளாக வனத்துறையில் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். வனக்காப்பாளராக திருவண்ணாமலை வனக்கோட்டத்தில் பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்த நிலையில் வனவராக பதவி உயர்வு பெற்று விழுப்புரம். திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய வனக்கோட்டங்களில் பணிபுரிந்து இன்று 31.05.2023 இல் பணி ஓய்வு பெற்றுள்ளார்.


வனத்துறையில் பணியில் சேர்வதற்கு முன்னர் இவர் 16 ஆண்டுகாலம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார்.

வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் அமிர்தி சிறு உயிரியல் பூங்கா ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

விழாவில் பேசிய அனைவரும் ஓய்வு பெறும் வனவர் திரு.K.K.சம்பத் அவர்கள் பழக மென்மையானவர் என்றும் அனைவரிடத்திலும் அன்பாக நடந்துகொள்பவர் என்றும் யாரையும் கடிந்து பேசாதவர் என்றும் கொடுக்கும் பணியினை சிறப்பாக செய்யக்கூடியவர் என்றும் எடுத்துக்கூறினர்.



இவ்விழாவினை திரு.R.ஆனந்தசெல்வகுமார் வனவர், தொங்குமலை பிரிவு அவர்கள் ஒருங்கிணைத்து வழங்கினார்.

 திரு.சபரிநாதன் வனக்காப்பாளர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

விழா இனிதே நிறைவுபெற்றது.