பசுமை தமிழ்நாடு இயக்கம்

இன்று 17.06.23 ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மாண்புமிகு ஆர்.காந்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களால் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து துவக்கி வைக்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வன அலுவலர், காவல்துறை அலுவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள், வனச்சரக அலுவலர்கள், வனவர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர். 


இத்திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் பசுமைப்போர்வையை அதிகரிக்கமுடியும். தேசிய வனக்கொள்கையின்படி ஒரு நாட்டின் மொத்த பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதி இருக்கவேண்டும். ஆனால் தமிழகத்தில் தற்போது வனப்பகுதி மற்றும் தனியார் நிலங்களில் உள்ள மரங்கள் ஆகியவற்றின் பசுமைப்பரப்பு 23.69 சதவீத அளவிற்கு மட்டுமே உள்ளது. 

எனவே தற்போது பசுமைப்பரப்பின் அளவை அதிகரிக்கும் நோக்குடன் அரசு பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற இயக்கத்தை உருவாக்கி அதன் மூலம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாய நிலங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இத்திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுவதுடன் நடவு செய்யப்படும் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுவது கண்காணிக்கப்பட உள்ளது. மரக்கன்றுகள் தனியார் நிலங்களில் முழுவதுமாகவோ அல்லது வரப்பு ஓரங்களிலோ நடவு செய்யலாம். இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த பயன்கிடைக்கும். மரப்பயிரும் பணப்பயிர்தான் என்பதை விவசாயிகள் உணர்ந்து மரக்கன்றுகளை நடவு செய்ய தற்போது ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. 

மரக்கன்றுகளை நடவு செய்தபின்னர் ஊடுபயிராக வேர்க்கடலை, எள், உளுந்து போன்றவற்றை பயிரிட்டு பயன்பெறமுடியும். இவ்வாறு ஊடுபயிரிடுவதால் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளின் வளர்ச்சி மிகவும் நன்றாக இருக்கும்.

                          


1 comment: