கல்வராயன் மலை காப்புக்காடாகுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை வட்டத்தில் இயற்கையான எழில்கொஞ்சும் பசுமையான பகுதியாக விளங்கும் இடம் தான் கல்வராயன் மலை என்னும் சுற்றுலாத்தலம். இம்மலையானது தற்போது தன் பொலிவை இழந்து வருவதாக சமூக ஆர்வலர்களும் இயற்கையின் மீது ஆர்வமும், இயற்கையின் அத்தியாவசியத்தை உணர்ந்த பொதுமக்களும் கருதுகின்றனர். தன் பொலிவை இழந்து வருவதற்கான காரணங்களில் முதன்மையானது காப்புக்காடாக மாற்றப்படாததும் ஒன்று என கருதப்படுகிறது. கல்வராயன் மலையின் பெரும்பகுதி தற்போது வனநிலமாக உள்ளது. 

கல்வராயன் மலை அழிக்கப்படுவதாக நாளிதழ் செய்தி



                                    ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியின் புகைப்படம்


காப்புக்காட்டிற்கும்(Reserved Forest) வனநிலத்திற்கும்(Reserved Land and Unreserved Land - RL, URL) சட்டத்தில் பல வேறுபாடுகள் உள்ளது. காப்புக்காடு என்பது அரசால் பாதுகாக்கப்படும் ஒரு வனப்பகுதியாகும். காப்புக்காட்டிற்குள் எந்தவொரு நோக்கத்திற்காகவும் உள்ளே நுழைவதே தவறு ஆகும். ஆனால் வனநிலம் என்றால் பல மரங்களை வெட்டி இடத்தை ஆக்கிரமிப்பு செய்தாலும் அதற்கான தண்டனைகள் மிகவும் குறைந்த பட்ச தண்டனைகளாகவே உள்ளன. எனவே ஆக்கிரமிப்புகள் அதிகமாகின்றன. ஒருமுறை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டால் அந்த இடத்திலிருந்து  அவர்களை வெளியேற்றுவதும் இல்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆக்கிரமிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. 

               

இயற்கை எழில்கொஞ்சும் இம்மலையில் யானை, புலி, சிறுத்தை போன்ற பலவகையான உயிரினங்கள் வாழ்ந்ததாகவும் காலப்போக்கில் அவை பல காரணங்களால் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னர் யானைக்கூட்டம் ஒன்று விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டப்பகுதியில் வந்தபோது இம்மலைப்பகுதியில் யானைகள் இருந்ததாலேயே அவற்றின் சந்ததிகள் இப்பகுதிக்கு வந்ததாகவும் பலரும் கூறினர். ஆய்வாளர்களும் இம்மலைப்பகுதியில் (பெரிய கல்வராயன் மற்றும் சின்ன கல்வராயன்) யானைகள் வாழ்ந்ததாக கூறுகின்றனர்.

கல்வராயன் மலையானது ஒருகாலத்தில் மன்னர்கள் மற்றும் ஜமீன்தாரர்களின் கட்டுப்பாட்டிலிருந்து 1976 ஆம் ஆண்டுமுதல் அரசுக்கட்டுப்பாட்டில் வந்தது. கல்வராயன் மலையானது சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைகளில் உள்ளது. சேலம் மாவட்ட ஆத்தூர் வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வரான் மலையின் பெரும்பாலான பகுதிகள் அரசால் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இம்மலைப்பகுதிகள் பெரும்பாலானவை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வன நிலங்களாகவே உள்ளதாக தெரிகிறது. இதனால் இயற்கையையும், வனப்பகுதியையும் முறையாக பாதுகாக்க முடியாத சூழல் உள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு வனச்சட்டத்தின் தண்டனைகள் காப்புக்காட்டிற்கும், வன நிலங்களுக்கும் வித்தியாசப்படுகிறது. கல்வராயன் மலை வன நிலமாக உள்ளதால் வனச்சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் சிரமம் உள்ளது. எனவே இங்குள்ள மக்கள் வனநிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது தொடர்கிறது. 

2006 வன உரிமை சட்டத்தின்படி இங்குள்ள மக்களுக்கு அவர்களுக்கான பட்டாக்கள் வழங்கப்படாமல் உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். வனப்பகுதி முறையாக அளவீடு செய்யப்பட்டு எல்லைகள் நிர்ணயம் செய்யப்படாமலும் உள்ளது. இதனால் வனப்பகுதிக்கும் தனியார் நிலங்களுக்கும் வேறுபாடு தெரியாத நிலை பல இடங்களில் காணப்படுகிறது. 
                                       
                                  ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியின் புகைப்படம்


இயற்கை எழில் கொஞ்சும் பகுதியான இம்மலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. மலைப்பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதாக சுற்றுலா செல்லும் பயணிகள் ஆதங்கப்படுகின்றனர். பல இடங்களில் அடர்ந்த காடுகள் மற்றும் ஓங்கி உயர்ந்த மரங்கள் காணப்படும் அதேவேளையில் ஒருசில இடங்ளில் மலை உச்சிவரையிலும் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளது கண்கூடாக தெரிகிறது. இம்மலையில் ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் இயற்கையாகவே அமைந்துள்ளது.
                                                             பெரியார் நீர்வீழ்ச்சி 


மலைவாழ்மக்களுக்கு போதிய வாழ்வாதாரம் இல்லை என்ற குற்றச்சாட்டும் ஒருபுறம் இருக்கிறது. வறுமையின் காரணமாக ஆந்திரமாநிலத்திற்கு செம்மரம் வெட்டச்சென்று அதில் பலர் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியாகினர். பலர் கைது செய்யப்பட்டனர்.

இங்குள்ள மலைவாழ்மக்கள் ஒருசில சமூக விரோதிகளின் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டு கள்ளச்சாராயம் காய்ச்சும் செயல்களில் ஈடுபடுகின்றனர். வனத்துறை மற்றும் காவல்துறையினர் பல இடங்களில் சோதனை மேற்கொண்டு சாராய ஊறல்களை அழித்தும் குற்றவாளிகளை கைதுசெய்தும் உள்ளனர். இயற்கையாக வனப்பகுதியில் கிடைத்த கடுக்காய், தேன் போன்றவை தற்போது குறைந்து வருவதாக கூறுகின்றனர். இதற்கான காரணம் கடுக்காய் மரங்கள் அழிக்கப்படுவதேயாகும். 

காப்புக்காடாக மாற்றப்படாததாலும் எல்லைகள் நிர்ணயம் செய்து எல்லைக்கற்கள் நடப்படாததாலும் வனப்பகுதிக்கும் தனியார் நிலங்களுக்கும் வேறுபாடு தெரியாத சூழல் உள்ளதால் ஒருசில நேரங்களில் வனத்துறையினருக்கும் மலைவாழ்மக்களுக்கும் கருத்து வேறுபாடு மற்றும் மோதல் ஏற்படுகிறது. 

வனச்சட்டங்களை பொருத்தவரை காப்புக்காடு, சரணாலயம், பூ்ங்கா போன்றவற்றிற்கு ஓரளவிற்கு கடுமையான தண்டனைகள் உள்ளன. எனவேதான் காப்புக்காடு சரணாலயம் போன்றவற்றில் ஒவ்வொரு வருடமும் வன உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. எனவே கல்வராயன் மலைப்பகுதியினை காப்புக்காடாக மாற்ற வனத்துறை தொடர்ந்து முயற்சிசெய்து விரைவில் காப்புக்காடாக அறிவிக்கவேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். காப்புக்காடாக மாற்றப்பட்டால் மட்டுமே தற்போது உள்ள வனப்பகுதியாவது காப்பாற்றப்படும் என்று பலரும் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment