நாட்டுக்குரங்கு - பிரச்சினைகள்

Bonnet macaque - நாட்டுக்குரங்கு

Bonnet macaque என அழைக்கப்படும் நாட்டுக்குரங்கு  1972 இந்திய வன உயிரினப்பாதுகாப்பு சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட ஒரு வன உயிரினமாகும். இது Schedule II Part - 1, Sl No 3A - ல் காணப்படுகிறது. இதனை வேட்டையாடுவது துன்புறுத்துவது போன்றவை இச்சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதன் அறிவியல் பெயர் Macaca radiata ஆகும்.


தமிழகத்தில் தற்போது ஒரு சில மாவட்டங்களில் (குறிப்பாக திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருச்சி) குரங்குகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இவை தற்போது வனப்பகுதிகளில் இருப்பதைவிட கிராமம் மற்றும் நகர்ப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இவற்றால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு சில மாவட்டங்களில் அதிக அளவில் காணப்பட்டாலும் ஒருசில புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இவை அழிந்து வருவதாக தெரிகிறது. எனவே இவை அதிகம் காணப்படும் இடங்களில் இருந்து முறையாக பிடித்து ஏற்கனவே காணப்பட்ட தற்போது அழிந்துவிட்ட இடங்களில் விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
இவை பல்கிப்பெருக காரணம் என்னவென்று பார்த்தால் உணவுச்சங்கிலியின் அடிப்படையில் குரங்கு இனத்தை வேட்டையாடி உண்ணக்கூடிய உயிரினம் அப்பகுதிகளில் இல்லாதது முக்கிய காரணமாகும். எனவே இவற்றின் எண்ணிக்கை கட்டுப்படாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் பொதுமக்களும் இவற்றின் மீது பரிதாபம் /அக்கறை கொண்டு அவற்றிற்கு
 தாங்கள் உண்ணும் உணவு வகைகளை கொடுக்கின்றனர். இதனால் இவற்றின் உணவுப்பழக்கங்கள் மாறி மனிதர்கள் உண்ணும் பலவற்றை அவைகள் தற்போது உண்ணத்தொடங்கிவிட்டன. இயற்கையாக பலவகை பழம் மற்றும் இலைகளை மரத்தில் ஏறி உற்சாகமாக அங்கும் இங்கும் ஓடி உணவைத்தேடி உண்ட காலம் போய் தற்போது அவை தெருக்களில் உற்சாகமாக உலாவருகின்றன. வயதான, உருவில் பெரியதான ஒருசில குரங்குகளை காணும்போது அச்சமாகவே உள்ளது. ஒருசில இடங்களில் மனிதர்களை கடித்து அவர்களிடமிருந்து தனக்கு தேவையான உணவுப்பொருட்களை பறித்துச்சென்றதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


வனத்துறையின் சார்பாக குரங்குகளுக்கு உணவளிக்கக்கூடாது என்றும் அதனால் அவற்றின் குணாதிசயங்கள் மாறிவருகின்றன என்றும் உணவளிப்பது சட்டப்படி தவறு என்றும் பல இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டும் உள்ளது. 

எனவே அரசாங்கம் குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றை பிடிக்கும்போது உடனே வனப்பகுதியில் விடாமல் அவற்றிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்து மருத்துவர் கண்காணிப்பில் சிறிதுகாலம் வைத்திருந்து பின்னர் வனப்பகுதிக்குள் விடும்பொழுது ஒருசில வருடங்களில் இவற்றின் எண்ணிக்கை மற்றும் இவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்படும். இல்லையெனில் கூண்டுவைத்து பிடிக்கப்படும் குரங்குகளை அடர்ந்த அதிக பரப்பளவுகொண்ட வனப்பகுதிகளில்விடவேண்டும். அவ்வாறு செய்தால் அங்குள்ள ஊன்உண்ணிகளால் குரங்குகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும். எனவே அரசாங்கம் நல்லதொரு முடிவை எடுத்து மனிதர்களுக்கும் அவர்களின் சொத்துகளுக்கும் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகும்.

திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் குரங்குகள் அட்டகாசத்தால் மக்களுக்கும் அரசு சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் மக்கள் அச்சத்துடனே அலுவலகத்திற்கு வரவேண்டிய சூழல் உள்ளதாக நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

 

குரங்கு பயத்தால் கப்பலும் நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் சோதனைக்குப்பிறகு அனுப்பப்பட்ட சம்பவமும் சென்னையில் நடந்துள்ளது
 


திருவண்ணாமலை அருகே குரங்குகள் கடித்ததாக செய்தி வந்துள்ளது



கடந்த சட்டமன்றக்கூட்டத்தொடரில் குரங்குகள் பற்றி சட்டமன்றத்தில் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள்விடவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது

அரக்கோணம் பகுதியில் குரங்குகள் கடித்ததாகவும் செய்தித்தாளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


வேலூர் பகுதியில் அரசுக்கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் சமுக விரோதிகளால் வீசப்படும் மதுபாட்டில்களில் உள்ள மதுவை குரங்குகள் குடிப்பதாக நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. இதனால் குரங்கின் இயல்புகள் மாறுவதாகவும் மனிதர்களை அவை அச்சுறுத்தவதாகவும் உள்ளது.

No comments:

Post a Comment