கடவூர் தேவாங்கு சரணாலயம்

தமிழகத்தில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அதற்கான தொடர்நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 12.10.2022 ஆம் தேதி அரசிதழில் (Gazette Notification) கடவூர் தேவாங்கு சரணாலயம் (Kadavur Slendor Loris Sanctuary) அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியை உள்ளடக்கிய இச்சரணாலயத்தின் பரப்பளவு 11806.56 எக்டர் ஆகும். 

 தேவாங்கு அரசால் பாதுகாக்கப்படும் வன உயிரினம் ஆகும். 1972 வன உயிரினப்பாதுகாப்பு சட்டம் அட்டவணை I , Part I Mammals Serial Number 20 (Loris - Loris tardigradus) இல் வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இதனை வேட்டையாடுவது, வேட்டையாட முயற்சிப்பது உள்ளிட்ட அனைத்தும் தண்டைக்குரிய குற்றமாகும்.
தேவாங்கு (Slender loris) என்பது சிறிய இரவு நேர பாலூட்டி வகையை சார்ந்தது. தங்கள் வாழ்நாளை பெரும்பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம் விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேடடையாடி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்றன. இந்த இனங்கள் சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. 
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தேவாங்கு இனத்தினை அழிந்துவரும் இனமாக பட்டியலிட்டுள்ளது. இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் இவைகளுக்கான அச்சுறுத்தல்களை தணித்தல் ஆகியவற்றின் மூலமே இவைகளின் எண்ணிக்கையை பெருக்க இயலும். 
இது பெரும்பாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள மழைவளக் காடுகளில் மரங்களிடையே வாழ்கின்றன. உருவத்தில் இது 18 முதல் 26 செ.மீ நீளமும் 85 முதல் 350 கிராம் எடையுமே உள்ள சிறிய விலங்காகும். பூச்சிகளையும், பறவை முட்டைகளையும், சிறு பல்லிகளையும் உண்ணும். சில சமயங்களில் இலை தழைகளையும் உண்ணும். சுமார் 166-169 நாட்கள் கருவுற்று இருந்து 1 முதல் 2 குட்டிகளை ஈனுகின்றன. பிறந்த குட்டிகளுக்கு 6 முதல் 7 மாதம் வரையில் பாலூட்டி வளர்க்கின்றன.

அச்சுறுத்தல்
உயிரியலாளர்களின் கருத்துப்படி தேவாங்குகள் அதிகமாக வேட்டையாடப்படுவதால் இவை இயற்கையில் அருகி வருகின்றன. தேவாங்கின் உடலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் மருத்துவக் குணமுடையது என உள்நாட்டு மக்களால் நம்பப்படுகின்றது. தேவாங்குகளின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். இதற்கு மேலதிகமாக வளர்ந்து வரும் சட்டவிரோதமான செல்லப்பிராணிகளின் கடத்தல் நடவடிக்கைகள் காரணமாகவும் இவை அழிந்து வருகின்றன.
No comments:

Post a Comment