மிதிக்கப்படும் வன சீருடைப்பணியாளர்களின் உயிர்கள்

 மிதிக்கப்படும் வன சீருடைப்பணியாளர்களின் உயிர்கள்

வனத்துறை என்பது நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கே முதுகெலும்பு போன்றது மற்றும் முக்கியமானதும் ஆகும். தேசிய வனக்கொள்கை 1988 ஒரு நாட்டின் மொத்த பரப்பில் 33 சதவீதம் வனப்பரப்பு இருக்கவேண்டும் என கூறுகிறது. நம் தமிழ்நாட்டைப்பொருத்தவரை வனப்பரப்பு 17 சதவீதம் என்ற அளவிலும் பட்டா நிலங்களில் உள்ள மரங்களையும் கணக்கிட்டால் 21 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. வனத்துறையினரின் அடிப்படை பணி என்பது வனத்தைப்பாதுகாப்பதும் மற்றும் மேலாண்மை செய்வதும் ஆகும் என வனச்சட்டங்கள் கூறுகின்றன. இப்பணியினை செய்யும் முன்களப்பணியாளர்கள் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆகியோர் ஆவர். இதிலும் குறிப்பாக அனுதினமும் காட்டிற்குள் செல்வது வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆவர். 

சிறிய வகையிலான செடி, கொடி, புல், பூண்டு முதல் பெரிய மற்றும் விலைமதிப்பு மிக்க தேக்கு, செம்மரம், சந்தனமரம், ஈட்டி போன்றவற்றையும் சிறிய உயிரினங்களான புழு, பூச்சி, பறவை முதற்கொண்டு பெரிய உயிரினங்களான புலி, சிறுத்தை, மான், யானை போன்றவற்றை பாதுகாக்கும் பணியினை மேற்கொள்ளும் துறை என்பதில் ஐயமில்லை.வனம் என்பது மனிதர்கள் நடமாட்டம் இல்லாத, சாலைவசதியற்ற பகுதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவ்வாறான காட்டிற்குள் சென்று பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் வனசீருடை பணியாளர்களுக்கு பல்வேறு இன்னல்கள் உள்ளன என்பது பொதுமக்களுக்கு தெரியவில்லையென்றாலும் வனத்துறையின் அலுவலர்களுக்கு நன்றாக தெரியும்.

பாதுகாப்பு பணிகாரணமாக காட்டிற்குள் செல்லும் பணியாளர்களுக்கு எந்தவொரு அவசர தேவை எனினும் காட்டிற்குள் இருந்து உடனே தகவல் தெரிவிப்பது சற்று சிரமமானது. அதேநேரம் பொதுவாக அவசர தேவை எனினும் உடனே வாகனம் வருவதற்கும் வனத்திற்குள் வழியில்லை. இது ஒருபுறம் இருக்க தேவையான மற்றும் அத்தியாவசியமான நவீன ஆயுதங்கள் ஏதும் வனத்துறையினர் வசமில்லை. பெரும்பாலான இடங்களில் தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் ஒன்றான வாக்கி டாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் வனச்சீருடைப்பணியாளர்களுக்கு சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் உள்ளது. சமூக விரோதிகள் பல அதிநவீன ஆயுதங்களை வைத்திருக்கக்கூடும் அதே சமயம் ஒரு குழுவாகவும் இருக்கக்கூடும், இதுபோன்ற சமயங்களில் அவர்களை எதிர்கொள்வது என்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும். இது தவிர வன உயிரினங்களான யானை, புலி, கரடி, சிறுத்தை மற்றும் பாம்பு போன்றவற்றாலும் பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இவற்றையெல்லாம் எதிர்கொள்ள எந்தவகையான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது கேள்விக்குறியே?? 

வனச்சீருடைப்பணியாளர்களைத்தவிர பிற துறையினர் மனிதர்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பணிபுரிகின்றனர். ஏதாவதொரு அவசர தேவையெனில் உடனே தொடர்பு கொள்ளமுடியும். பிற துறையில் வேலை செய்பவர்களுக்கு அதாவது காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை போன்ற சீருடைப்பணியாளர்கள் ஆகட்டும் வருவாய்த்துறை, போக்குவரத்து துறை, உள்ளாட்சித்துறை, கல்வித்துறை போன்ற பிற துறைகளில் அவர்களின் அவசர தேவைக்கு உடனே மருத்துவமனை செல்லவோ உதவிக்கு அழைக்கவோ வழிவகை மற்றும் அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் வனப்பகுதியில் ஏதேனும் ஒரு விபத்து நேர்ந்தால் (எலும்பு முறிவு, மாரடைப்பு. பாம்பு கடித்தல் இன்னும் பிற) அவர்கள் தகவல் கொடுப்பதற்கும், அவசர உதவிக்கும், அருகில் உள்ள சாலைப்பகுதிக்கு வருவதற்கும் போதிய வசதி வாய்ப்புகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். எனவே பிற துறையினருடன் ஒப்பிடும்போது வனத்துறையினரின் பணி என்பது சவாலான ஒன்றாகும். வனசீருடைப்பணியாளர்களைத்தவிர அதிரடிப்படை உட்பட பிற துறையினர் வனத்திற்குள் பணிநிமித்தமாக செல்லும்போது தேவையான போதிய பாதுகாப்பு வசதிகளுடன் செல்கின்றனர். ஆனால் வனச்சீருடைப்பணியாளர்களின் நிலை என்ன என்பதை அனைவரும் உணரவேண்டும்.


ஓசூர் வனக்கோட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் பணிபுரிந்த திரு மாரப்பன், வனக்காவலர் அவர்கள் 06.01.19 அன்று மாலை யானை விரட்டும் பணியில் குழுவினருடன் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக யானை தாக்கி இறந்துவிட்டார். உயர் அலுவலர்களின் முயற்சியால் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது


23.12.2019 இல் வனக்காப்பாளர் திரு.மகேந்திரன் என்பவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு வனப்பகுதியிலேயே அகால மரணமடைந்தார். அவருக்கு நேர்ந்த அதே நிலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் வனக்கோட்டம், விளாமுண்டி வனச்சரகத்தில்  மழைக்கு பிந்தைய வனஉயிரின கணக்கெடுப்பு பணி 17.12.2020 அன்று மேற்கொண்டிருந்தபொழுது, களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளடக்கிய கணக்கெடுப்பு குழுவினரை சுமார் மாலை 3.45 மணியளவில் சிங்கமலை காவல் சுற்றில் காட்டுயானை தாக்க தொடங்கியதில் வனக்காப்பாளர் திரு பா. பொன்கணேசன், காட்டுயானையால் தாக்கப்பட்டு காயமடைந்தார். காயமடைந்த திரு பா.பொன்கணேசன், வனக்காப்பாளரை மீட்க சென்ற போது சுமார் 4.30 மணியளவில் சிங்கமலை காவல்சுற்று வனக்காவலர் திரு கு. சதீஸ்குமார் காட்டுயானையால்  தாக்கப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். காட்டு யானை தாக்குதல் நிகழ்த்தியதில் தப்பி காட்டுக்குள் சென்ற பிற குழுவினரை தேடுகையில், தன்னார்வலர் ஒருவரும் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். இதுபோன்று பல வன சீருடைப்பணியாளர்கள் வனப்பணியின்போது தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்கதையாக உள்ளது. மனித உயிர்கள் மதிக்கப்படவேண்டியது. மிதிக்கப்படவேண்டியது அல்ல. மனித உயிர்களை காப்பாற்ற முடியவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது. அவர்களின் தியாகத்தை மதிக்கிறோமா??? அவருடைய இழப்பு ஈடுசெய்யமுடியாத ஒன்று, ஆனால் அதற்கு ஆறுதலாக அரசும், வனத்துறை அலுவலர்களும் மற்றும் வனஅலுவலர் சங்கமும் இருக்கவேண்டாமா? உயிருக்கு போராடி உயிரிழந்தார்கள் வனசீருடைப்பணியாளர்கள். அரசால் வழங்கப்படும் நிதி மற்றும் கருணை அடிப்படையிலான வேலைக்கும் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பம் போராடலாமா??


தன் உயிரை இழந்து இந்த நாட்டின் தேவைக்கு இல்லை இல்லை அத்தியாவசிய தேவைக்கு பாடுபடும் வன சீருடைப்பணியாளர்களின் நிலையினை சிந்தித்து அவர்களுக்கு தேவையான சலுகைகளை உரிமைகளாக வழங்கவேண்டும். ஒருசில இடங்களில் வனசீருடை பணியாளர்களுக்கு ஊதியம் அந்தந்த மாதங்களில் கிடைப்பதில்லை, இதுதவிர ஏற்கனவே அரசால் வழங்கப்படும் சலுகைகளான காலணி, டார்ச்லைட், மழை அங்கி, இடமாற்ற பயணப்படி, பயணப்படி, விடுப்புகால சலுகை போன்றவை (கொரோனா காலத்திற்கு முன்னர் அளிக்கப்பட்டவை) கிடைப்பதில்லை. அரசு கொடுத்தாலும் அலுவலர்கள் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

தமிழ்நாடு வன அலுவலர் சங்கத்தின் மாநில தலைமை தமிழ்நாடு அரசுக்கு தற்போது யானை தாக்குதலில் இன்னுயிரை இழந்த வனக்காவலரின் குடும்பத்திற்கு உதவுமாறு அனுப்பிய கடித நகல்




எனவே அரசும், அரசுத்துறை அலுவலர்களும், வனச்சங்கமும் இனியும் காலம் தாழ்த்தாமல் வனச்சீருடைப்பணியாளர்களின் பணியினை அங்கீகரித்து வரும் புத்தாண்டிலாவது (2021) புத்துணர்ச்சியினை ஏற்படுத்தவேண்டும்.


No comments:

Post a Comment