March 20 (உலக சிட்டுக்குருவிகள் தினம்)

உலக சிட்டுக்குருவிகள் தினம்

உலக சிட்டுக்குருவிகள் தினம் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் நாளன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையானது அண்மைக் காலங்களில் குறைந்து கொண்டே வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 2010 ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக மார்ச் 20 ஆம் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான உயிரியற் பல்வகைமை (biodiversity) மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறுவதற்கும் இந்நாள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.


2010 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் "எமது வீட்டுக் குருவிகளைப் பாதுகாப்போம்" (We will save our House Sparrows) என்பதாகும்.

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருவிகளில் இந்த அழிவை 1990களிலேயே முதன்முதலாக அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். இவற்றுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் சில:

    தற்போது நாம் வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், குளிரூட்டப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது. ஆனால் முந்தைய காலங்களில் வீடுகள் காட்டோற்றமாக கட்டப்பட்டது. வீடுகளில் காணப்படும் முற்றங்கள் போன்ற இடங்களில் குருவி இனங்கள் கூடு கட்டி வாழும்.

    எரிவாயுக்களில் இருந்து வெளியேறும், மெத்தைல் நைட்ரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன. தற்போது கிராமங்களிலும் இதுபோன்ற நிலை காணப்படுகிறது.

    பலசரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை. ஆனால் நம் முன்னோர்கள் பறவையினங்களுக்கு தானியங்களை அவற்றின் உணவுக்காக விட்டுவைத்தனர்.

    வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.

    அலைபேசிகளின் வருகைக்குப் பின், குருவிகளின் அழிவு அதிகரித்து விட்டன. அலைபேசிக் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.

வீட்டுச் சிட்டுக்குருவி (ஆங்கிலப் பெயர்: House sparrow), உயிரியல் பெயர்: Passer domesticus) என்பது சிட்டுக்குருவிக் குடும்பமான பேஸ்ஸரிடேவில் உள்ள ஒரு பறவை ஆகும். இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. வீட்டுச் சிட்டுக்குருவி ஒரு சிறிய பறவை ஆகும். பொதுவாக இதன் நீளம் 16 செ.மீ.ம், எடை 24-39.5 கிராமும் இருக்கும். பெண் சிட்டுக்குருவிகள் மற்றும் குஞ்சுகள் வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும், மற்றும் ஆண் சிட்டுக்குருவிகள் பிரகாசமான கருப்பு, வெள்ளை, மற்றும் பழுப்பு அடையாளங்களுடனும் காணப்படும். பேஸ்ஸர் பேரினத்தில் உள்ள 25 இனங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் பூர்வீகம் பெரும்பகுதி ஐரோப்பா, மத்தியத்தரைக்கடல் பகுதிகள் மற்றும் பெரும்பகுதி ஆசியா ஆகும். இது மனிதனால் வேண்டுமென்றோ அல்லது விபத்தாகவோ ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் பெரும்பகுதிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டுச் சிட்டுக்குருவி உலகிலேயே அதிகபட்சமாகப் பரவிய காட்டுப் பறவையாக உள்ளது. 

No comments:

Post a Comment