ஆவாரை ( Cassia auriculata )

ஆவாரையின் தாவரவியல் பெயர் Cassia auriculata என்பதாகும். இது      Fabaceae என்ற குடும்பத்தை சார்ந்தது. 
ஆவாரை, ஆவிரை அல்லது மேகாரி  என அழைக்கப்படும் இத்தாவரமானது ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடையது. இது ஒரு சங்க கால மலராகும்.
”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ ?” என்பது சித்த மருத்துவப் பழமொழி.
ஆவாரை செடி வகையைச் சார்ந்தது. புதர்செடி அமைப்பிலும் வளரும். பளிச்சிடும் தங்க மஞ்சள் நிறமான, கொத்தான பூக்களை உடைய தாவரம். மெல்லிய, தட்டையான காய்களை உடையது.
தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பாக வளர்கின்றது. சாலை ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும் இயற்கையாக ஆவாரை வளர்ந்திருக்கும்.
ஆவிரை என்பது இக்காலத்தில் ஆவாரம்பூ என வழங்கப்படுகிறது. தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம்பூவை இக்காலத்திலும் பயன்படுத்துகின்றனர்.


குறிஞ்சிப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் ஒன்றாக இது குறிப்பிடப்பட்டுள்ளது

மருத்துவ பயன்கள்

ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது.

நீரிழிவுநோய், மேக நோய்கள், நீர்க்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கான மருத்துவத்திற்கு பயன்படுகிறது.

ஆவாரை இரத்தத்தில் யூரியாவின் அளவைக் குறைக்கும்.

இலை, பூ, பட்டை உடலைப் பலமாக்கும்.
உடம்பிற்கு பொற்சாயலைத் தரும். வேர், இளைத்த உடலைத் தேற்றும். விதை காமம் பெருக்கும், குளிச்சியுண்டாக்கும்.

குறிப்புகள்

நீண்டதூரம் நடந்து செல்பவர்கள் ஆவாரை இலையை பருத்தி துணியில் பரப்பி, அந்தத் துணியை மடித்து தலைப்பாகையாக செய்து, தலையில் அந்தத் தலைப்பாகையை வைத்துக் கொண்டு நடந்து செல்லும்போது வெயிலின் தாக்கம் குறையும். வேகமாக நடக்கலாம்.

ஆவாரை இலையை பாசிப்பருப்பு, பூலாங்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்துவர உடல் அரிப்பு, உடல் வெப்பம் ஆகியவை குறையும்.

தோல் அரிப்பு மற்றும் நமைச்சல் குணமாக பசுமையான அல்லது உலர்ந்த பூக்களுடன், சமஅளவு பச்சைப்பயறு சேர்த்து அரைத்து, வெந்நீர் கலந்து பசையாக்கி, உடம்பில் தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.

வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் போன்றவற்றிற்கு ஆவாரையின் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொண்டு, அரை கிராம் அளவு, 2 கிராம் வெண்ணெயில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன்கிடைக்கும்.

மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து, ஒரு லிட்டர்  நீரில் இட்டு, 200 மி.லி. ஆக சுண்டக் காய்ச்சி, 50 மி.லி. அளவில் காலை, மாலை என இரண்டுவேளையும் குடித்துவர வேண்டும்.

உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும் அல்லது பூவைக் குடிநீராக்கியும் சாப்பிட்டு வரலாம் அல்லது பூ இதழ்களைச் சேகரித்து, கூட்டு செய்து, தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

நீரிழிவு மருத்துவத்தில் ஆவாரை
பழங்காலத்திலிருந்தே, ஆவாரைக்கும் நீரிழிவை கட்டுப்படுத்தும் செயல்முறைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இது ஆவாரையின் பரந்த உபயோகத்திலிருந்து தெளிவாகின்றது.
ஆவாரை பூக்கள் இருபதை எடுத்து பசைபோலச் செய்து, புளித்த மோரில் கலக்கிக் குடிக்க வேண்டும். தொடர்ந்து 2 மாதங்கள் வரை இவ்வாறு செய்து வர நீரழிவு கட்டுப்படும்.

ஆவாரம் பூ, கருவேப்பிலை, நெல்லிக்காய் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

தினமும் 5 ஆவாரம்பூ சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண் குணமாக ஆவாரம் இலையை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன்  சிறிது நல்லெண்ணெய் விட்டு சிறுதனலில் (மிதமான சூட்டில்) ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.
இதுபோல் ஒருநாள் விட்டு ஒருநாள் கட்டிவர சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

  ஆவாரம் பூ மற்றும் அருகம்புல் வேரைபொடி செய்து நெய்யுடன் சாப்பிட மூலம் குறையும்.

1 comment: